நியூஸ்கிளிக் ஆசிரியர் புதியதலைமுறை
இந்தியா

’நியூஸ்கிளிக் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும்’ - உச்சநீதின்ற நீதிபதிகள் சொன்ன காரணம் இதுதான்!

PT WEB

நியூஸ்கிளிக் ஊடகத்தின் நிறுவனரும் ஆசிரியருமான பிரபிர் புர்காயஸ்தாவை கைது செய்தது செல்லாது என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நியூஸ்கிளிக் ஆங்கில ஊடகத்தை நடத்தி வரும் பிரபிர் புர்காயஸ்தா இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைப்பதற்காக சீனாவிலிருந்து நிதி பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்டவிரோத செயல்கள் தடுப்புசட்டத்தின் கீழ் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற அமைப்புடன் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சீனா மேற்கொண்டு வரும் பொய் பரப்புரை என்ற பெயரில் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரையை தொடர்ந்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் நியூஸ் கிளிக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 300 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பிரபிர் புர்காயஸ்தா கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் பி ஆர் கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் புர்காயஸ்தாவை கைது செய்தது செல்லாது என்றும் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கைதுக்கான காரணங்கள் புர்காயஸ்தாவிற்கு முறையாக வழங்கப்படவில்லை என்றும் எனவே அவரது கைது செல்லாதது ஆகிறது என்றும் நீதிபதிகள் விளக்கினர்.