நீட் விவகாரம், உச்சநீதிமன்றம் pt web
இந்தியா

நீட் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களா? உச்ச நீதிமன்றத்தில் பரபர விசாரணை; NTAக்கு முக்கிய உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை, நகரங்கள் வாரியாக தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட தேசிய தேர்வுகள் முகமை அவகாசம் கோரியதைடுத்து சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்குள் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் நிரஞ்சன்குமார்

நீட் விவகாரத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை, மத்திய அரசு, சிபிஐ ஆகியவை ஏற்கனவே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லட்சக்கணக்கான மாணவர்கள் வழக்கின் முடிவுக்காக காத்திருப்பதாகவும், சமூக சீர்கேடுகள் தொடர்பான விவகாரம் என்பதால் நீட் தேர்வுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் வழங்குகிறது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நீட் தேர்வு

ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கேட்கவில்லை என்றும் தேர்ச்சிபெற்ற சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தினால் போதும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகு தான் அதை செய்ய முடியும் எனவும் கூறினார்.

ஐஐடி சென்னை கொடுத்த அறிக்கை ஒருதலைப் பட்சமானதா?

ஐஐடி சென்னையின் இயக்குனர், தேசிய தேர்வுகள் முகமையின் ஆட்சிமன்ற உறுப்பினராக இருப்பதால் அதன் அறிக்கையை ஏற்கக் கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர். அதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தோடு, இந்த ஆண்டு ஜே இ இ தேர்வை ஐஐடி சென்னை நடத்துவதால் அதன் இயக்குநர், தேசிய தேர்வுகள் முகமையின் குழுவில் இடம் பெற்று இருப்பார், ஐஐடி சென்னை கொடுத்த அறிக்கை ஒருதலை பட்சமானது என்ற கேள்விக்கு இடமில்லை என தெரிவித்தது

நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் பிடித்தவர்களில் ஒன்பது பேர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட ஐஐடி சென்னை தவறிவிட்டதாக வாதிடப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள 56 நகரங்களில் உள்ள 95 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளதால், சரியான முறையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை வாதம் வைத்தது

நீட் விவகாரங்களில் தனியார் நிறுவனங்களா?

சில இடங்களில் நீட் வினாத்தாள் ரிக்ஷாக்களில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டபோது, அவை ஓஎம்ஆர் ஷீட்டுகள் மட்டுமே என மத்திய அரசு தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நீட் விவகாரங்களில் தனியார் நிறுவனங்களை பயன்படுத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். தனது தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வரும்போது இது குறித்து விளக்கம் அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

Neet

பீகார் காவல்துறையின் விசாரணையின்படி நிறைய மாணவர்கள் மே ஐந்தாம் தேதி காலையிலேயே நீட் வினாத்தாளில் உள்ள வினாக்களை மனப்பாடம் செய்து முடித்திருக்கிறார்கள் எனில் வினாத்தாள் மே நான்காம் தேதியே கசிந்திருக்கிறது என மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது. வினாத்தாள்கள் முன்பாகவே கசிந்திருக்கிறது என்றால் நிச்சயமாக அது பேராபத்து என தலைமை நீதிபதி கூறினார்.

தேர்வு மையங்கள் வாயிலாக முடிவுகள்...

அலுவல் நேரம் நிறைவடைந்ததையடுத்து விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி, அன்றைய மதியத்திற்குள் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என அறிவித்தார். கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு தெரிவித்த போது அது குறித்து எந்த கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்.

உச்சநீதிமன்றம்

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு மதிப்பெண் விவரங்களை முழுமையாக வெளியிட தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு மாணவர்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

மேலும் வினாத்தாள் கசிவு தொடர்பான பீகார் காவல்துறையின் கேஸ் டைரியை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளை, தேர்வு மையங்கள் வாரியாக வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்வுகள் முகமை அவகாசம் கோரியதையடுத்து, சனிக்கிழமை பிற்பகல் 12 மணிக்குள் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.