டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பயிற்சியாளராக பெண் ஒருவர் சேர்ந்துள்ளார். லெப்டினன்ட் பதவிக்கான கமிஷன் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களில் அவருக்கு மேஜர் வினோத் ரக்வான் என்னும் இராணுவ அதிகாரியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்தைக் காரணம் காட்டி அப்பெண்ணைப் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் நஷ்ட ஈடு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் “திருமணத்தின் காரணமாக பெண் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது” என்று கூறி, மேலும் அப்பெண்ணிற்கு மத்திய அரசாங்கம் 60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கூறும்போது, "ஒரு பெண்ணை அவரது திருமணத்தைக் காரணம் காட்டி வேலையில் இருந்து நீக்குவது மனித மான்பையும், பாலின பாகுபாடற்ற மனித உரிமையையும் கேள்விக்குறியாக்கும்.
பாலின மற்றும் சார்பு அடிப்படையிலான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாதவை.
பெண் ஊழியர்களின் திருமணம் மற்றும் அவர்களது சொந்த வாழ்வை காரணம் காட்டி செய்யப்படும் இதுபோன்ற பணிநீக்கங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது” என்று தெரிவித்துள்ளனர்.
மனுதாரர், ராணுவ நர்சிங் சேவைக்கு தேர்வு செய்யப்பட்டு, லெப்டினன்ட் (லெப்டினன்ட்) பதவியில் பணியாற்றும் போது இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட பணிநீக்க உத்தரவு, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அனுப்பட்டுள்ளது என்றும் அதுமட்டுமின்றி திருமணத்தின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அவ்வுத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கு லக்னவ்வில் உள்ள ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்குச் சென்றுள்ளது. அங்கு அப்பெண்ணின் பணியையும் ஊதியத்தையும் அவருக்கு மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இராணுவ சங்கத்தினர் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அங்கு மனுதாரருக்கு ரூ.60,00,000/ இழப்பீடு வழங்குமாறு சங்கத்திற்கு உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. “எட்டு வார காலத்திற்குள் மனுதாரருக்கு பணம் செலுத்தப்படாவிட்டால், மேல்முறையீடு செய்யப்படும்போது இந்த உத்தரவின் தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
- சண்முகப் பிரியா. செ