சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் மம்தா பானர்ஜி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா தெரிவித்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒருபோதும் நாங்கள் கூறவில்லை என்றும் அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதையே எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, “சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீ்வ் குமார் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. மேற்கு வங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பானர்ஜி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட்ஸ் விசாரணைக்கு மாநில அரசும், போலீஸாரும் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.