ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் ரத யாத்திரை வருகிற 23 ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா மூலம் கொரோனா பரவும் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இயந்திரம் உதவியுடன் தேர் இழுக்கப்படும் என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஒடிஷா அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஆனால் இதை ஏற்காத உச்ச நீதிமன்றம் இந்தாண்டு ரத யாத்திரை நடத்த தடை விதித்தது. தற்போதைய சூழலில் ரத யாத்திரை நடத்த அனுமதித்தால் வைரஸ் பரவலுக்கு அனுமதி தந்தது போல் ஆகிவிடும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன், பகவான் ஜெகன்நாதரே இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்பு புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இப்போது புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. அதில் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததை அடுத்து நீதிபதிகள் அனுமதி அளித்தனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய தீர்ப்பு வெளியானதும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 'ஜெய் ஜெகன்னாத்' என்று ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.