மக்களவை தேர்தலில் 50% மின்னணு வாக்கு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உத்தரவிட வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 25ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பதில் அளிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியிருந்தன. இந்நிலையில் வாக்கு இயந்திரங்களில் வாக்களிக்கும் போது வெளியாகும் ஒப்புகைச் சீட்டை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என அவை கோரியிருந்தன.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் 50 வாக்கு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திர பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 கட்சியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வாக்கு இயந்திர பதிவுகளுடன் ஒப்புகை சீட்டு பதிவுகளை எண்ணி பின்னர் ஒபபீடு செய்து சரி பார்க்க இயலுமா என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.