இந்தியா

‘திருமணமான பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் தங்கலாம்’- நீதிமன்றம்

rajakannan

திருமணமான பெண்கள் வழக்கமான கணவரின் வீட்டில்தான் இருப்பார்கள். இல்லையென்றால் தனிக்குடித்தனம் இருப்பார்கள். பெரும்பாலும், திருமணமான பின்னர், பெண்கள் தனது பெற்றோர்களின் வீட்டில் வசிப்பதில்லை. கணவன் இறந்தாலோ அல்லது வேறுவொரு சிக்கலான தருணங்களில் தான் அவர்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டில் இருப்பார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில் பெண்கள் தங்கள் தங்களின் பெற்றோர்களின் வீட்டிற்கு செல்வதோ அல்லது ஹாஸ்டலில் தங்குவதோ அல்லது கணவன் வீட்டில் தங்குவதோ அவர்களின் விருப்பம் தான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

இப்ராஹிம் சித்திக்யு என்பவர் மதம் மாறி ஆர்யன் ஆர்யா என்ற பெயருடன் அஞ்சலி ஜெயின் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது மனைவி அஞ்சலியை பெற்றோரின் பிடியில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆர்யன் ஆர்யா சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், பெண் விரும்பினால் விடுதிக்கோ அல்லது பெற்றோருடனோ செல்லலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆர்யன் ஆர்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்த்ரசந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உங்கள் இருவருக்கும் உண்மையில் திருமணம் நடந்ததா? ஏன் உங்கள் கணவருடன் நீங்கள் வாழ விரும்பவில்லை? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அஞ்சலியிடம் கேட்டனர். அதற்கு, “நான் ஒரு மேஜர். என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. ஆர்யன் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட போதிலும் நான் எனது பெற்றோருடன் வசிக்கவே விரும்புகிறேன். இது நானாக எடுத்த முடிவு” என்று அவர் கூறினார். 

பெண்ணின் கருத்தை கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட பெண் கணவருடன் செல்ல விரும்பவில்லை. திரும்பவும் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புகிறார். அவரை அவரது பெற்றோருடன் செல்ல அனுமதிக்கிறோம். அவர்களின் திருமணம் குறித்து எவ்வித கருத்தினையும் எங்களால் தெரிவிக்க முடியாது. அவர் மேஜர் என்பதால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு” என தெரிவித்தனர்.