இந்தியா

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை வழக்கு - மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் கொலை வழக்கு - மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

PT

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அமைதியான வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்கள்மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடைய கார் புகுந்ததில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகான வன்முறையின்போது, பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பல முக்கியமான அறிவுறுத்தல்களையும் உச்சநீதிமன்றம் கொடுத்தது.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரபிரதேச காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்பொழுது 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையானது கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையே அலகாபாத் உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், வெளியில் வந்த அவர் புகார் கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியனது. இதனையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மனு தாக்கல் செய்திருந்த நிலையில், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி எல்லை மாவட்டங்களில் தங்கக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என பல நிபந்தனைகள் அவரில்லி விதிக்கப்பட்டுள்ளது. இடைகால ஜாமீனில் அவரது நடத்தையை பொறுத்தே ஜாமீன் நீட்டிப்பு முடிவெடுக்கப்படுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.