இந்தியா

மம்தாவை விமர்சித்து மீம்ஸ்: பாஜக நிர்வாகி மன்னிப்புக் கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸூடன் கலந்துகொண்டார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதன் மீது கிரீடம், மினுமினுக்கும் ஆடை, கண்கள் ஓரம் பளபளக்கும் மேக்கப் என முழுவதுமாக மாறி வந்த பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தை பலரும் கலாய்த்தனர். அதை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். 

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் ஹவ்ரா மாவட்ட பெண் பாஜக நிர்வாகியான பிரியங்கா சர்மா, அந்த புகைப்படத்தில் இருந்த பிரியங்கா சோப்ராவின் முகத்தை மறைத்துவிட்டு, அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தான் பானர்ஜியின் முகத்தை கிராபிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க பாஜக மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. விசாரித்த நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்க முன் வந்தது.

’’பொதுவெளியில் இருப்பவர்கள் கண்ணியத் துடன் நடந்துகொள்ள வேண்டும். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் நிபந்தனை யற்ற, எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதத்தை அவர் கொடுக்க வேண்டும். அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதை கொடுக்க வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.