இந்தியா

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்

jagadeesh

தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்த தமிழகத்தின் மனுவை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

தென் பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கட்டி வரும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில், கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது.

தமிழகத்திலும் தென்பெண்ணை ஆறு பாயும் நிலையில், தங்களிடம் உரிய அனுமதி பெறாமல், கர்நாடக அரசு அணை கட்டி வருவதாகக் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மேலும் கடந்த 1892-ம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை கர்நாடக அரசு மீறி செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அரசின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு அணை கட்ட தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.