சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா. இவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியது.
சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர் பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இது ஒருபுறம் இருக்க, தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அலோக் வர்மாவின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீப்பளித்த நீதிபதிகள் அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதோடு, வர்மா மீது பிரதமர் தலைமையிலான குழுவே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறினர். உடனடியாக பதவிக்குத் திரும்பிய அலோக் வர்மா, 10 அதிகாரிகளின் பணி மாற்றத்தை ரத்து செய்தார். 5 அதிகாரிகளை பணிமாற்றம் செய்தார்.
இந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே.சிக்ரி பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அவரின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையின் தலைவராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.