இந்தியா

பொருளாதார இடஒதுக்கீடு பெற்றோருக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண் !

பொருளாதார இடஒதுக்கீடு பெற்றோருக்கு குறைவான கட் ஆப் மதிப்பெண் !

rajakannan

ஸ்டேட் வங்கி கிளர்க் தேர்வு முடிவில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை விட பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது வகுப்பினருக்கு கட் ஆப் மதிப்பெண்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதனையடுத்து, ஜூன் 22, 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 

இந்நிலையில், கிளர்க் பணித் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், எஸ்.சி., ஓபிசி., பொதுப் பிரிவினர் ஆகிய மூன்று தரப்புக்கும் 61.25 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எஸ்.டி பிரிவினருக்கு 53.75 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 28.5 மதிப்பெண்ணாக உள்ளது. அதாவது எஸ்.சி., எஸ்.டி பிரிவினரை விட குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, எஸ்.பி.ஐ வங்கியின் தேர்வு முடிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு 10 சதவீத இடஒதுக்கீடு முறையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.