இந்தியா

உலகுக்கே சோதனைகளைத் தந்து விடைபெறும் 2020

உலகுக்கே சோதனைகளைத் தந்து விடைபெறும் 2020

webteam

கொரோனா பொதுமுடக்கத்தால் பல்வேறு இன்னல்களைத் தந்த இவ்வருடம் மெல்ல நகர்ந்து, இன்றுடன் நிறைவடையப்போகிறது. புத்தாண்டு என்றாலே, ஒவ்வோர் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி இரவு, உலகமே கொண்டாட்டக் கடலில் முழ்கித் திளைக்கத் தொடங்கிவிடும்.

ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவைத் தடுக்க கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருக்கும் தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அதன்படி, நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்குள் மூடப்படும் என்றும், மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னையில் 300 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்துக்களை தடுக்கும் வகையில் மேம்பாலங்களை மூட திட்டமிட்டுள்ள காவல் துறை, பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படையையும் அமைத்திருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமி, விடுதிகள், பொது இடங்களில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாவும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையைப் போன்றே டெல்லியிலும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுருக்கும் நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் தடை இல்லை என அறிவித்திருக்கிறது டெல்லி அரசு. கொரோனாவால் புத்தாண்டின் வழக்கமான கொண்டாட்டங்கள் குறைந்தாலும், அதனால் ஏற்படும் நன்மையை எண்ணி நம்பிக்கையுடம் 2021 ஆண்டில் அடியெடுத்து வைக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்திய மக்கள்.