சாவித்ரி ஜிண்டால் pt web
இந்தியா

இந்தியாவின் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால்.. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டி

Angeshwar G

வேட்பு மனுத்தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் போராடி வருகிறது.

ஹரியானாவில் முதல்வர் நவாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதைத் தவிர ஆம் ஆத்மி , ஜனநாயக ஜனதா கட்சி , ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலின் மனைவி சாவித்ரி ஜிண்டால் ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான நேற்று, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த சாவித்ரி ஜிண்டால், ஹரியான மாநில அமைச்சரும், ஹிசார் தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுமான கமல்குப்தாவிற்கு எதிராக போட்டியிட உள்ளார்.

ஹிசார் எனது குடும்பம்

வேட்புமனுத் தாக்கல் செய்த பின் பேசிய அவர், “ஹிசார் தொகுதியின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக நான் சேவை செய்வேன் என உறுதியளித்துள்ளேன். ஹிசார் எனது குடும்பம். ஜிண்டால் குடும்பம் எப்போதும் ஹிசாருக்கு சேவை செய்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும் அவர்களின் நம்பிக்கையை பேணுவதற்கும் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சாவித்ரி ஜிண்டாலின் கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் காங்கிரஸ் சார்பாக 1991, 2000, 2005 என மூன்று முறை ஹிசார் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் 2005 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த பின் சாவித்ரி ஜிண்டால் அரசியலுக்கு வந்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலிலும், 2009 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். பூபேந்தர் சிங் ஹூடா அமைச்சரவையில் அமைச்சராகவும் செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்தியாவின் பணக்காரப் பெண்மணி

இவரது மகன் நவீன் ஜிண்டால், கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தற்போது இவர் குருஷேத்ரா மக்களவைத் தொகுதியின் எம்பியாக உள்ளார். மக்களவைத் தேர்தலில் நவீன் ஜிண்டாலுக்கு ஆதரவாக சாவித்ரி ஜிண்டால் பரப்புரை மேற்கொண்டார். ஹிசார் மக்களவைத் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். இவை அனைத்திற்கும் மாற்றாக, சாவித்ரி ஜிண்டால் ஹிசார் சட்டமன்ற தேர்தலில், பாஜக சார்பாக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக தலைமை கமல் குப்தாவையே மீண்டும் களமிறக்க விரும்பிய நிலையில், சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

29.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் நாட்டின் பணக்காரப் பெண்மணியாக இருப்பவர் சாவித்ரி ஜிண்டால் என ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.