சாவர்க்கர், சுதா கொங்கரா எக்ஸ் தளம்
இந்தியா

சாவர்க்கர் சர்ச்சை கருத்து| வரலாற்றைத் திரித்ததாக விமர்சனம்.. மன்னிப்பு கேட்ட இயக்குநர் சுதா கொங்கரா

Prakash J

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர், சுதா கொங்கரா. இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அந்தப் பேட்டியில், "நான் பெண் கல்வி குறித்து படித்தபோது, எனது ஆசிரியர் ஒருவர் சாவர்க்கர் பற்றிய கதையைச் சொன்னார். சாவர்க்கர் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் அவர் தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில், அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள்.

சாவர்க்கரின் மனைவி படிப்பதற்காக சென்றபோது அவரை அந்தத் தெருவில் இருந்தவர்கள் கேலி செய்துள்ளனர். இது அவருடைய மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, மேலும் ‘நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன்’ என்று அழுது கூறியிருக்கிறார். அதற்கு சாவர்க்கர், பொறுமை இழக்காமல், தனது மனைவியைப் பள்ளிக்குச் சென்று கல்வி பெற ஊக்குவிக்க முயற்சித்தார். இந்தச் செயல் சரியா, தவறா என்பதில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அதிலிருந்து பல்வேறு கேள்விகள் எனக்குள் தோன்றின” என்றிருந்தார்.

இதையும் படிக்க: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

சுதா கொங்கராவின் இந்தப் பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பல்வேறு தரப்பினர் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். அதாவது, ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் பூலேவின் வரலாற்றைத்தான், ’சாவர்க்கரின் வரலாறு’ என சுதா கொங்கரா திரித்துப் பேசியதாக விமர்சித்தனர்.

ஜோதிபா பூலேதான், தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்தப் பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்டனர். அந்த ஒடுக்குமுறையை மீறி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு” என விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டனர்.

என் தவறுக்கு வருந்துகிறேன் - இயக்குநர் சுதா கொங்கரா

இந்த நிலையில், சாவர்க்கர் பற்றிய தனது பேச்சுக்கு சுதா கொங்கரா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், “என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்துநான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக, அதன் உண்மைத்தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது, என் பக்கத்தில் தவறுதான்.

எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கு என்றும் தலைவணங்குகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மனைவியைக் காண அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர்.. ஆந்திராவில் அரங்கேறிய விநோத சம்பவம்!