சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில், கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு சிபிஐ வசம் வருவதற்கு முன்னதாக, ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவே விசாரித்து வந்தது. அப்போது, ஊழலில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு ராஜீவ் குமார் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அவர் மீதும் சந்தேகம் அடைந்துள்ள சிபிஐ, அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது. ராஜீவ் குமார் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ராஜீவ் குமார் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக சிபிஐ தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விமான நிலையங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்து உஷார்படுத்தப்பட்டுள்ளது.