இந்தியா

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி

rajakannan

தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிப்போம் என சிவசேனா தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் சிவசேனா வாக்களித்தது. மகாராஷ்டிராவில் அதன் உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து வாக்களித்த நிலையில், சிவசேனா ஆதரித்தது. இதனையடுத்து, திடீரென தங்களுக்கு மசோதாவில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்தால் மட்டுமே மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கப்படும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் கூறுகையில், “இந்த மசோதா தொடர்பாக எங்களுடைய சந்தேகங்களை எழுப்பி விளக்கம் பெறுவோம். எங்களுக்கு விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், மக்களவையில் எடுத்த முடிவில் இருந்து மாறுபடுவோம்.

இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்யக் கூடாது. அது சரியானது அல்ல. இந்து - முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்காதீர்கள். அத்துடன், இந்த மசோதாவில் இலங்கையில் உள்ள தமிழ் இந்துக்களுக்கு சாதகமாக  எதுவும் இல்லை” என்றார்.

இதனிடையே, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று பிற்பகம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது.