கேரள மாநிலம் புதிய தலைமுறை
இந்தியா

கேரளா | கழிவுநீர் ஓடையில் சிக்கிய தூய்மை பணியாளர்; 24 மணி நேரம் ஆகியும் மீட்டெடுக்க முடியாத அவலம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கழிவுநீர் ஓடையில் தூய்மை பணிகளுக்கு இறங்கிய துப்பரவு தொழிலாளி கழிவுநீர் ஓடையில் மாயமான சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மனு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் தம்பானூர் பகுதி வழியாக செல்லும் மிகப்பெரிய கழிவுநீர் ஓடை, ‘ஆமை இழஞ்சாம்’ ஓடை. மாநகராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் ஓரமாக செல்லும் இந்த கழிவுநீர் ஓடை, ரயில் தண்டவாளங்களின் கீழ் இருக்கிறது.

இந்த கழிவு நீர் ஓடையில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கி நிற்பதால், அனைத்தையும் சுத்தம் செய்ய நேற்று துப்புரவு தொழிலாளர்களை நியமித்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

இதில், மாநகராட்சி ஒப்பந்த துப்பரவு தொழிலாளர் ஜோய் (42) சுத்தம் செய்யும் பணிகளை செய்து கொண்டு இருந்தபோது திடீரென மாயமானார். தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை பல்வேறு மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் இறங்கியும் ஜோய்யை கண்டுபிடிக்க முடியவில்லை. 

தொடர்ந்து இன்று காலையில் மீண்டும் தேடுதல் பணி துவங்கியது. இந்த பணிக்கு துவக்கம் முதலே தலைமை தாங்கி வரும் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், இன்று ஸ்கூபா டைவிங் படையினரை இறக்கினர்.

இவர்கள் அனைத்து பாதுகாப்பு கருவிகளுடன் தேடுதல் பணியில் இறங்கி கழிவுநீர் ஓடையின் உள் பகுதிக்கு சென்று ஜோயை தேடினர். ஆனால் ஓடையில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கி நிற்பதால் அந்த பணியை முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை. இதனால், தற்போது கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

மாயமான துப்பரவு தொழிலாளியை 24 மணி நேரமாக கண்டுபிடிக்க முடியாமல் மாநகராட்சி திணறிவருவது, பெரும் பதைப்பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.