இந்தியா

இருமாத சம்பளத்தை  அள்ளிக் கொடுத்த தூய்மைப்பணியாளர் - தெலங்கானா சிட்டிசன் ஹீரோ

இருமாத சம்பளத்தை  அள்ளிக் கொடுத்த தூய்மைப்பணியாளர் - தெலங்கானா சிட்டிசன் ஹீரோ

webteam
துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும்  ஒருவர் தனது இருமாதச் சம்பளமான 17 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
 
ஒரு இக்கட்டான காலகட்டத்தில்தான் இதயம் உள்ளவன் மனிதன் என்பதை உலகம் உணரும். அப்படி ஒரு இதயம் உள்ள ஒரு மனிதரைப் பெற்றுள்ளது தெலங்கானா மாநிலம். இந்தக் கொரோனா தொற்றுக்கான போரில் உண்மையில் ஹீரோக்கள் துப்புரவுப் பணியாளர்கள்தான். ஆகவேதான் அவர்களை மரியாதையுடன் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. 
 
 
இந்நிலையில், தெலங்கானாவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்  போந்த சாய் குமார். இவர் தனது  இருமாத ஊதியமான 17 ஆயிரம் ரூபாயை அப்படியே கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக அம்மாநில அமைச்சர்  கே டி ராமராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சுறுசுறுப்பான மற்றும் சமூக உணர்வுள்ள இளைஞன்" என்று  போந்த சாய் குமாரைப் பற்றி எழுதியுள்ளார்.
 
 
இதன் மூலம் இன்று ஒரே நாளில் போந்த சாய் தெலங்கானா நெட்டிசன்கள் மத்தியில் பெரிய ஹீரோவாக மாறியுள்ளார். இவருக்கு குவிந்த பாராட்டினால் சமூக ஊடகம்  திணறிப் போய் நிற்கிறது. பணக்காரர்கள்தான் உதவ வேண்டும் என்பதல்ல; மனம் உள்ளவர்கள் அனைவரும் பணக்காரர்கள்தான் என்பதை சாய் தனது சேவை மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் எனப் பலரும் அவரைப் பற்றி எழுதி வருகின்றனர். குமார் ஒரு பெரிய இதயம் கொண்டவர் என்றும் சிலர் எழுதியுள்ளனர். 
 
 
மேலும் சிலர்,  “இந்த நபரை சிட்டிசன் ஹீரோ என்று அங்கீகரித்ததற்கு நன்றி, இதே போன்ற செயல்களைச் செய்ய இது நிச்சயமாக மற்றவர்களை ஊக்குவிக்கும். இந்தத் தொற்றுநோய் முடிந்ததும் அவரை உங்கள் அலுவலகத்திற்கு அழைக்கவும் ”என்று ஐந்தில் ஒரு பங்கினர் கருத்து கூறியுள்ளனர்.
 
கே டி ராம ராவ், #சிட்டிசன்ஹீரோஸ் என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.