இந்தியா

“கல்புர்கி, கவுரி லங்கேஷை சுட்டது ஒரே துப்பாக்கிதான்” - தடயவியல்துறை

“கல்புர்கி, கவுரி லங்கேஷை சுட்டது ஒரே துப்பாக்கிதான்” - தடயவியல்துறை

webteam

மூத்த பத்திரிகையாளர்கள் எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரே துப்பாக்கியால்தான் எனத் தடயவில்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரும், ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி கடந்த 2015ஆம் ஆண்டு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததால், இவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவர் காவல் பாதுகாப்பு வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்ததால், அது திரும்பப் பெறப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகு இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டது மர்ம நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இதேபோன்று பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த வருடம் பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய அரசு வழங்கிய சாஹித்ய அகாதெமி விருதினை பல எழுத்தாளர்கள் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் கொலை தொடர்பாக சிசிடிவி கேமராக் காட்சிகள் வெளியாகின. 

இந்நிலையில் இந்த இரண்டு கொலை சம்பவங்களிலும் ஒரே ரக துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என தடயவில்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரு நீதிமன்றத்தில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் போது, தனிப்படை காவல்துறையினர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். இருவரும் சுடப்பட்டது 7.5 எம்எம் கலிபெர் பிஸ்டல் ரக துப்பாக்கியில்தான் என அவர்கள் உறுதிசெய்துள்ளனர்.