சம்பாய் சோரன் Facebook
இந்தியா

அதிகாரப்பூர்வமாக JMM கட்சியிலிருந்து விலகினார் சம்பாய் சோரன்! பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்!

PT WEB

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக விலகினார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்றபோது முதலமைச்சர் பொறுப்பை சம்பாய் சோரன் ஏற்றார். 5 மாதங்கள் முதலமைச்சராக பதவிவகித்த அவர், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியேவந்த பின்னர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

அப்போது நடந்த சில சம்பவங்கள், விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரச்னைகளில் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பாய் சோரன் நாளை தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையவுள்ளார். முன்னதாக டெல்லியில் சில தினங்களாக முகாமிட்டிருந்த சம்பாய் சோரன், பாஜக மூத்த தலைவர்களை நேரில் சந்தித்திருந்தார்.