சாம் பிட்ரோடா - காங்கிரஸ்  புதிய தலைமுறை
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா சாம் பிட்ரோடா?

PT WEB

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, “தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் கிழக்கிந்தியர்கள் சீனர்கள் போன்றும் வட இந்தியர்கள் வெள்ளையின மக்கள் போலவும் மேற்கு இந்திய மக்கள் அரபியர்கள் போலவும் இருக்கின்றனர்” எனக் கூறியிருந்தார்.

pm modi, sam pitroda

தோற்றங்களில் மாறுபட்டிருந்தாலும் ஒரே சமூகமாக ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்கள் உலகிற்கே சிறந்த உதாரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்து மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சாம் பிட்ரோடாவின் கருத்தை பிரதமர் மோடி விமர்சித்து பேசினார்.

அதில் பிரதமர் மோடி, “சக இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை. பிட்ரோடா கருத்துக்கு ராகுல்காந்தி என்ன பதிலளிக்கப் போகிறார்? இதுபோன்ற கருத்துகளை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து தொடர்ந்து பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதனால், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்வாரா? அதற்கான துணிச்சல் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி

இதற்கு பதிலளித்துள்ள திமுக, ஒருவரின் தனிப்பட்ட கருத்து, காங்கிரஸின் கருத்தாகிவிடாது என தெரிவித்தது. இருப்பினும் இந்தியர்களின் நிறம் குறித்த சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார்.