சலீம் கான், சல்மான் கான் எக்ஸ் தளம்
இந்தியா

”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” - மகனுக்கு ஆதரவாக பேசிய தந்தை!

”சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” என மகனுக்கு ஆதரவாக அவருடைய தந்தை சலீம் கான் தெரிவித்துள்ளார்.

Prakash J

மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது பல வழக்குகள் உள்ளன. இதே கும்பல், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

தற்போது பாபா சித்திக்கின் படுகொலையைத் தொடர்ந்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கான மான்களை, சல்மான் கான் வேட்டையாடினார் என்பதற்காகவே அவர் லாரன்ஸ் பிஷ்னோயால் குறிவைக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம்கூட சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!

இந்த நிலையில் மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அவரது தந்தை சலீம் கான் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், "சல்மான் கானுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கரப்பான்பூச்சியைக்கூடக் கொன்றதில்லை. சல்மான் கான் ஒரு நாயைச் செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய், உடல்நலக் குறைவால் இறந்தபோது சல்மான் கான் கண்ணீர்விட்டு அழுதார்.

’மான்களை யார் கொன்றது’ என்று சல்மானிடம் நான் கேட்டேன். ’நான் அதை செய்யவில்லை; அந்த இடத்தில் நான் இல்லை’ என்று அவர் என்னிடம் கூறினார். என்னிடம் அவர் பொய் சொல்லமாட்டார். சல்மான் கான் விளையாட்டுக்காக விலங்குகளை கொல்லும் நபர் கிடையாது. அவர் ஏதாவது தவறு செய்தாரா? அவர் செய்ததை நீங்கள் யாராவது பார்த்தீர்களா? அவர் துப்பாக்கியைக்கூட பயன்படுத்தியதில்லை. அப்படியிருக்கையில், இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத சல்மான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? சல்மான் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? எத்தனை பேர் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்? ஒரு மிருகத்தின் உயிரைக் காப்பாற்றியவர்கள் எத்தனை பேர். இந்த மிரட்டல்கள் என்பது தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு