மான் வேட்டையாடிய வழக்கில், ஆயுதங்களின் உரிமச் சான்றிதழ் தொடர்பாக, போலி பிரமாண பத்திரம் சமர்ப்பித்ததாக, தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சல்மான்கான் விடுவிக்கப்பட்டார்.
அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் மீது மூன்று வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒன்று சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கு. இந்த வழக்கின்போது, தனது துப்பாக்கி உரிமம் தொடர்பாக போலியான பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்ததாக மற்றொரு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சல்மான் கான் வழக்கறிஞர், ஆயுத உரிமம் புதுப்பித்தல் ஆவணங்களை அவர் தொலைத்துவிட்டார். எனினும், அவை உரிமம் புதுப்பித்தலுக்கு அனுப்பப்பட்டது உண்மைதான். தவறான வாக்குமூலத்தை அவர் பிரமாணப்பத்திரத்தில் சமர்பிக்க வேண்டும் என்பது அவர் நோக்கமல்ல என்றும் வாதிட்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சல்மான் கானை விடுவித்தது.