இந்தியா

அமர்நாத் தாக்குதல்: ஓட்டுநர் சலீமுக்கு காஷ்மீர் அரசு வெகுமதி

அமர்நாத் தாக்குதல்: ஓட்டுநர் சலீமுக்கு காஷ்மீர் அரசு வெகுமதி

webteam

மகிழ்ச்சியுடன் தொடங்கிய பயணம், இப்படி கொடூரமாக முடியும் என நினைக்கவில்லை என தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து 50 யாத்ரீகர்களை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் சலீம் ஷேக் கபூர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டின் நடுவே, உயிரை பணயம் வைத்து பேருந்தில் இருந்த மற்றவர்களின் உயிரை அதன் ஓட்டுநர் சலீம் காப்பாற்றியுள்ளார். தெற்கு குஜராத்தை சேர்ந்த சலீம் ஷேக் கபூர் என்பவர் அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஐந்தாவது முறையாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்களை சலீம் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் வேனை நிறுத்தியிருந்தால் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்று, இருட்டான பகுதியில் நிறுத்தி பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சலீமின் இந்த செயல் நாடு முழுவதும் பாராட்டுக்களை குவித்து வருகின்றது. இந்நிலையில், பலியான உடல்கள் விமானப்படையின் சிறப்பு விமானத்தில் நேற்று குஜராத் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சலீம் கூறுகையில், “பஸ்சின் டயர் பஞ்சர் ஆனதால் இரண்டு மணி நேரம் எங்களது பயணம் தாமதமானது. இதனால்தான் நாங்கள் மற்ற வாகனங்களுடன் இணைந்து செல்ல முடியவில்லை. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும் பஸ்சை வேகமாக ஓட்டிச்சென்று இருட்டில் நிறுத்தினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடங்கிய பயணத்தில் இது போல கொடூரமாக முடியும் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஓட்டுநர் சலீமின் செயலை பாராட்டி 3 லட்சம் ரூபாய் வெகுமதி தருவதாக காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது