இந்தியா

பாலியல் புகாரில் சிறையிலுள்ள எம்.எல்.ஏவை சந்தித்தார் பாஜக எம்.பி சாக்‌ஷி மகாராஜ்

பாலியல் புகாரில் சிறையிலுள்ள எம்.எல்.ஏவை சந்தித்தார் பாஜக எம்.பி சாக்‌ஷி மகாராஜ்

webteam

பாலியல் புகாரில் சிறையில் உள்ள எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரை சிறையில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பாஜக எம்.பி சக்‌ஷி மகாராஜ். 

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மாணவி ஒருவர், தன்னை பாரதிய ஜனதா எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்நிலையத்தில் புகார்‌ அளித்தார். 

காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் பெண்ணின் தந்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் அருகே தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரை மீட்ட காவல்துறையினர் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அப்போது, புகாருக்குள்ளான பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் தனது ஆதரவாளர்களுடன், மாணவியின் தந்தையை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் குல்தீப் சிங் செங்கரை கைது சிறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து குல்தீப் மீது கடந்த ஜூலை மாதம் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்தியன் பீனல் கோட் மற்றும் போஸ்கோ சட்டம் உட்பட 120பி, 363, 366, 376(1), 506 ஆகிய பிரிவுகளின் கீழ் செங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜக எம்.பி சக்‌ஷி மகாராஜ், குல்தீப் சிங் செங்கரை சிறையில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சக்‌ஷி மகாராஜ், “அவர் நீண்ட நாட்களாக சிறையில் உள்ளார். அவர் மிகச்சிறந்த எம்.எல்.ஏ. அதனால் தேர்தல் முடிவுற்ற நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.