பிரிஷ் பூஷன், சாக்‌ஷி மாலிக் ட்விட்டர்
இந்தியா

“பிரிஜ் பூஷன் சிங்கால் எனது குடும்பத்திற்கு ஆபத்து” - சாக்‌ஷி மாலிக்

“பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம்” - என மல்யுத்தத்திலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்காக நடைபெற்ற தேர்தலில், கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். இவருடைய தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டுவிலகினார். மேலும் சில வீரர்களும், வீராங்கனைகளும் தங்களுக்கு அளித்த பதக்கங்களை மத்திய அரசிடம் திரும்ப அளித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன்காரணமாக, அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. அத்துடன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத்துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் 3 பேர் கொண்ட குழுவை தற்காலிமாக நியமித்தது. அந்த வகையில் இந்த தற்காலிகக் குழுவிற்கு வுஷூ அசோசியேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்குவார் எனவும், ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற எம்.எம்.சோமயா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனையான மஞ்சுஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தக் குழு, ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புன்யா, சீனியர் உலக போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை. இது, மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ’முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் (ஓய்வு) வினேஷ் போகத் ஆகியோர் எங்களின் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர்’ என்று கூறி, அவர்களுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (ஜன.3) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று (ஜன.3) செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மாலிக், “என்னுடைய வாழ்நாளின் பல வருடங்களை மல்யுத்தத்திற்காக கொடுத்துவிட்டு சமீபத்தில்தான் ஓய்வுபெற்றேன். அதனால், நான் அவ்வளவு அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். எங்களுக்கு சஞ்சய் சிங் மட்டும்தான் பிரச்னை. அவரைத் தவிர புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் எங்களுக்கு பிரச்னை இல்லை. மல்யுத்த சம்மேளனத்தின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உறுதிசெய்ய வேண்டும். பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்றார்.

இதையும் படிக்க: லாரி ஓட்டுநர்கள் போராட்டம்: மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள்.. குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபர்!

மேலும் அவர், “நான் ஓய்வு பெற்றாலும், 58 கிலோ பிரிவில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் தங்கம் அல்லது வெள்ளியை உறுதிசெய்து, நான் 2016 ஒலிம்பிக்கில் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். யு15, யு17, யு20 பிரிவுகளுக்கான தேசிய மற்றும் முகாம்களை நடத்த தற்காலிகக் குழுவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

வீராங்கனைகள் யாரும் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளக்கூடாது. பெண்களுக்கு கூட்டமைப்பில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டால், மல்யுத்த வீராங்கனைகளுக்கு சிறப்பானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: பழிக்குப்பழி தீர்த்த இந்தியா: சீறிய சிராஜ்.. 55 ரன்களுக்குள் சுருண்ட தென்னாப்பிரிக்கா!