இந்தியா

1984 கலவர வழக்கு - ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் மனு

1984 கலவர வழக்கு - ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் மனு

rajakannan

சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ல் நடந்த கலவர வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ‌உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் விளைவாக சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அரசின் கணக்குப்படி இந்த வன்முறைகளில் சுமார் 2800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசின் கணக்கு கூறுகிறது. 

சீ்க்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், கலவர வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ‌ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (டிச.17)  தீர்ப்பு அளித்தது. மேலும் வரும் 31ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, சரணடைவதற்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு சஜ்ஜன் குமார் மனுதாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது. 

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சஜ்ஜன் குமார் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிகிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், மேல்முறையீடு செய்வது தங்களுக்கு உள்ள உரிமை என்று சஜ்ஜன் குமார் தரப்பு வழக்கறிஞர் அனில் சர்மா கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த மனு குறித்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் பூல்கா கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சஜ்ஜன் குமார் மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.