மோடி, அமித்ஷா புதியதலைமுறை
இந்தியா

“மோடி, அமித்ஷாவின் பேச்சு.. ஏற்றம் கண்டு சரிந்த பங்குச்சந்தை..” - ராகுல் வைத்த பகீர் குற்றச்சாட்டு!

”திட்டமிட்டு கருத்து கணிப்புகளை வெளியிட்டதால், பங்குச் சந்தையில் 38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Jayashree A

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக இந்திய பங்குச் சந்தையானது வரலாறு காணாத உயர்வை அடைந்து புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. அதற்கு காரணம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்ததால் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கினர். அதனால், பங்குச் சந்தையானது புதிய உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் கருத்துகணிப்புகள் சொன்னது போல் அல்லாமல் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், பங்கு சந்தையில் குறிப்பிட்ட தினங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது முழுக்க திட்டமிட்ட ஊழல் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ”சிலர் கோடிக்கணக்கான ரூபாய் பெறவேண்டும் என்பதற்காக பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. அதாவது, கடந்த மே 13ம் தேதி அமித்ஷா, பங்கு சந்தையில் ஜூன்4ம் தேதிக்குள் பங்குகளை வாங்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ஜூன் 19ம் தேதியில் பங்குசந்தையில் புள்ளிகள் அதிகரித்து வந்தது. அவர்களின் திட்டப்படி, அடுத்ததாக மோடியின் ஆட்சிவரும் என்று பொய்யாக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டது.

அதனால் ஜூன் 4ம் தேதி பங்கு சந்தை அதிவேகமாக 2000 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்தது. அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்கு சந்தை சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதில் 38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆகவே, இதை செபி விசாரிக்கவேண்டும்”. என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறும்பொழுது, “பங்குச் சந்தை என்பது குஜராத் பேட்டை என்பார்கள். பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் வியாபாரமோ அல்லது தொழிலோ செய்யாமல், ஒரு சிறு அறையை வைத்துக்கொண்டு பங்குச்சந்தை தரகர் என்று சொல்லிக்கொண்டு சம்பாதித்து வருகின்றனர். அம்பானி, அதானி போன்றவர்கள் தங்களது கருப்பு பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து வாங்கும் பங்குகளை, அதிக விலை ஏற்றம் செய்கின்றனர். விலை ஏறிய அப்பங்குகளை வங்கிகளில் பத்திரமாக வைத்து கடன் பெற்று அதை மீண்டும் முதலீடு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இது ஒரு சூதாட்டம். தங்களுக்கு வேண்டியவர்கள் லாபம் பெறுவதற்காக, ஒரு பொய்யான கருத்து கணிப்பை ஏற்படுத்தி, பங்குகளின் விலையை அதிகரித்து பங்கு சந்தையின் புள்ளிகளை அதிகரித்தனர்.

கொரோனா தொற்று காலத்தில் கூட இந்திய பங்குச் சந்தை சரிவை சந்திக்கவில்லை. அதற்கு காரணம் இதுதான்” என்று கூறினார்.