சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் செங்கனஞ்சேரியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் அறிவித்துள்ளன. இந்தநிலையில், பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறையே சபரிமலையில் தொடர வேண்டும் எனக்கோரி செங்கனஞ்சேரியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தேவஸ்வம் போர்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
அதேசமயம் ஆரன்முலாவில் உள்ள தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை இந்து அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.