இந்தியா

சபரிமலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை !

சபரிமலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை !

jagadeesh

கேரளாவின் பிரசித்தப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 14 ஆம் தேதி மாதாந்திர பூஜைக்கு திறக்கப்படுகிறது. ஆனால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தேவஸம் போர்டு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்தன. இந்தியாவில் இந்தப் பொது முடக்கம் 80 நாள்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தற்போது பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6500 பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஜூன் 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து முன்னதாக பேட்டியளித்திருந்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் "ஐயப்பன் கோயிலும் பக்தர்களின் தரிசனத்துக்காக ஜூன் 14 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்; அதேசமயம், கோயில் வளாகத்துக்குள் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதால், குறிப்பிட்ட நேரத்தில் 50 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அதற்கேற்ப பக்தர்களுக்குத் தரிசனத்துக்கான நேரம் ஆன் -லைன் மூலம் ஒதுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள அம்மாநில தேவஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரேன் "ஜூன் 14 ஆம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். ஆனால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த முடிவை கோயிலின் தலைமை தந்திரியிடம் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்பட்டது" என கூறியுள்ளார்.