இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறப்பு !

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று திறப்பு !

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாசி மாதப் பூஜைக்காக திறக்கப்படும் கோயிலின் நடை 5 நாட்களுக்கு திறக்கப்படும். இதனையொட்டி சபரிமலை கோயில் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜை முடிந்த பின்பு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி கோயிலின் நடை சாத்தப்பட்டு இன்றுதான் திறக்கப்படுகிறது.

கோயில் நடை திறக்கப்பட உள்ளதையொட்டி, 10 முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் கோயிலில் வழிபாடு நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாஜகவினரும் போராட்டம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மகரவிளக்கு பூஜையின்போது கோயிலில் சாமி தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா ஆகியோர் மீண்டும் சாமி தரிசனம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இது கேரள மாநிலக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் " அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது பல்வேறு பிரிவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, இந்த முறை பக்தர்களுக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படாத வண்ணம், நிலக்கல்லில் இருந்து கோயில் சன்னிதானம் பகுதி வரை குறிப்பிட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களும், செய்தியாளர்களும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குப் பிறகே நிலக்கல்லில் இருந்து அனுமதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் மாதாந்திர பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதம் திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.