புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா நடைமுறை வழிகாட்டுதலின் படி , சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கோயிலுக்குள் பக்தர்கள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த ஐந்து நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வருகின்ற 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நடை அடைக்கப்பட உள்ளது.
முன்னதாக கும்பம் மாத பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கும்போது பரிட்சார்த்த முறையில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசிப்பதாகவும், வரும் நவம்பர் 16ம் தேதி துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.