உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகு இன்று மாதாந்திர பூஜைக்காக முதல் முறையாக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலைக்கு வரும் பெண்களை, நிலக்கல் பகுதியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இதை எதிர்க்க மாட்டோம் என்றும் என்று கூறிவிட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. ஆனால், அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்கும் முடிவுக்கு ஐய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப் பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.
கேரள அரசின் முடிவுக்கு காங்கிரஸும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரியும் பாரதீய ஜனதா சார்பில் சபரிமலை ஆசார பாதுகாப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். அப்போது பெண்களும் கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''சீராய்வு மனு தாக்கல் இல்லை''
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுவதால், அனைத்து வயது பெண்களும் சபரிமலை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், 10 முதல் 55 வயது பெண்கள் கோயிலுக்குச் செல்வதை தடுக்கும் வகையில், நிலக்கல் பகுதியிலேயே போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து பெண்களை கீழிறங்கச் செய்யும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு கடைபிடிக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலைக்கு வருவதற்கு, பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் விவகாரத்தில் போராட்டங்களை முடிவுக்குக்கொண்டுவர தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.சபரிமலைக்குள் அனைத்துவயது பெண்களும் நுழைவதை தடுக்க அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆன்டோ ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். மேலும் சபரிமலைக்கு பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து எரிமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.