சபரிமலை விஷயத்தை அரசியல் லாபத்திற்காக பாஜக கையில் எடுப்பதாக குற்றம்சாட்டி கேரளாவில் அக்கட்சியிலிருந்து இரண்டு பேர் விலகியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சபரிமலை விஷயத்தை அரசியல் லாபத்திற்காக பாஜக கையில் எடுப்பதாக குற்றம்சாட்டி கேரளாவில் அக்கட்சியிலிருந்து இரண்டு பேர் விலகியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். கேரள பாஜக மாநில குழு உறுப்பினரான கிருஷ்ண குமார் மற்றும் ஜெயகுமார் ஆகியோர்தான் பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க மாநில பாஜக ஆலோசனைக் கூட்டத்தை கூட நடத்தவில்லை எனவும் இதன்மூலம் ஆர்எஸ்எஸ் திட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாஜக தனது அனைத்து செல்வாக்கையும் இழந்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.