சபரிமலைக்கு சென்றுவிட்டு, தனது தந்தையை காணவில்லை என்று கதறிய சிறுவனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவை வைத்து பலரும் அரசியல் செய்து வருகின்றனர். கேரள கம்யூனிச அரசு இந்துக்களை தவறாக நடத்துவதாகவும், அலட்சியப்படுத்துவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். வழக்கத்தை விட அதிகமாக இந்த ஆண்டு, சிறுவர்கள், குழந்தைகள் அதிகம் தரிசனம் செய்து வருகின்றனர்.
அன்றாடம் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானமும் திணறி வருகிறது. இதற்கிடையே சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவை X தளத்தில் பதிவிடும் சிலர், சிறுவனை காவல்துறையினர் துன்புறுத்துவது போன்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேருந்தொன்றில் அமர்ந்திருக்கும் சிறுவனை குறிப்பிட்டு, கேரள போலீஸார் அச்சிறுவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி, அவனிடம் கொடூரமாக நடந்துகொள்வதாக கூறிவருகின்றனர்.
ஆனால், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபோதுதான் நடந்தது தெரியவந்தது. சபரிமலைக்கு அப்பாவுடன் வந்த மகன், ஒருகட்டத்தில் அப்பாவை காணவில்லை என்று போலீஸிடம் சொல்கிறான். அங்கிருந்த போலீஸாரும், சிறுவனை மீட்டு பொதுப்பேருந்து ஒன்றில் (வீடியோவிலுள்ள வாகனத்தின் எண்ணை பார்க்கையில் அது கேரள அரசுப்பேருந்து என தெரிகிறது) வைத்து அவனை சமாதானம் செய்கின்றனர். ஆனால் தொடர்ந்து, கைக்கூப்பியபடி அப்பாவை கண்டுபிடித்துத்தருமாறு சிறுவன் அழுகிறான்.
அடுத்த சில நிமிடங்களில் அவனது அப்பா அங்கு வந்தவுடன், ‘அப்பா’ என்று நிம்மதிப்பெருமூச்சு விடும் சிறுவன். அங்கிருந்து செல்கையில் போலீஸுக்கும் போய்வருவதாக கூறிவிட்டுச் செல்கிறான். இவை அனைத்தும் அங்கிருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறுவன் தன் தந்தையை கண்டபின் அமைதியாகும் வீடியோவை, கீழுள்ள இணைப்பில் காணலாம்.
இதுபோன்ற வீடியோக்களை வைத்து அரசை எதிர்க்கட்சியினரும் விமர்சித்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் தரிசனத்தை முறையாக கவனிக்கும்படி கேரள முதல்வர் பினராயி விஜயனும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.