இந்தியா

இதுவரை நாலரை லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் - சபரிமலை யாத்ரீகர்கள் மகிழ்ச்சி!

இதுவரை நாலரை லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் - சபரிமலை யாத்ரீகர்கள் மகிழ்ச்சி!

webteam

தேவஸ்வம் போர்டின் அன்னதான மண்டபங்கள் மூலம் நாலரை லட்சம் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகப்புறம் ஆகிய இடங்களில் அன்னதான மண்டபங்கள் இயங்கி வருகின்றன. அன்னதான மண்டபங்கள் மூலம் இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட, நவம்பர் 16ம் தேதி முதல் கடந்த 17 நாட்களில் நாலரை லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அன்னதான மண்டபங்களில் தினமும் சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் உணவு உண்டு மகிழ்கின்றனர். மண்டல மற்றும் அகர விளக்கு பூஜை காலங்களில் ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வழங்க இதுவரை ரூ.50 லட்சம் அன்னதானத்திற்காக நன்கொடையாக கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னதான மண்டபத்தில் 3,500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு அளிக்கும் வகையில் அதிநவீன வசதிகள் உள்ளன. முழு மண்டபமும் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்குவது குறித்த அறிவிப்பு, பிற மாநில பக்தர்களுக்காக பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

காலை உணவாக காலை 6.30 மணி முதல் 11 மணி வரை உப்புமா, துவரம் பருப்பு மற்றும் சுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரை அளவில்லா மதிய உணவு, ஊறுகாய், சாலட், சுக்கு தண்ணீர் வழங்கப்படும். இரவு உணவு 6.30 முதல் 11.15 வரை கஞ்சியும் பயறும் வழங்கப்படுகிறது. உணவைப் பரிமாறிய பிறகு பாத்திரங்களை சுத்தம் செய்ய மின்சாரம் கொதிகலன் மூலம் பாத்திரங்களைக் கழுவும் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதான மண்டபத்தில் 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நீராவி முறையைப் பயன்படுத்தி உணவை சமைப்பதன் மூலம், மிக விரைவாகவும், குறைந்த செலவிலும் உணவைத் தயாரிக்க முடிகிறது. சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளில் அவசர காலத்தை சமாளிக்க தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் பணியாளர்கள் சமையலறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். வெளியாட்களுக்கு இங்கு அனுமதி இல்லை. இதன் மூலம் அனைவருக்கும் முறையான ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் தேவஸ்வம் போர்டு உறுதி செய்கிறது.