கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 65 வயதுக்கும் மேல் உள்ளவர்களும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படுகிறது. இதனிடையே, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி, 65 வயது மேல் உள்ள பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் வரிசை நடைமுறை மூலம் முன்பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சபரிமலையில் தங்குவதற்வோ, எருமேலி, பம்பை ஆற்றில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் வெளி மாநில பக்தர்களும் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.