இந்தியா

சபரிமலை: அதிகாலையில் இசைக்கப்படும் ஐயப்பன் துயில் உணர்த்தும் பாரம்பரிய 'தாயம்பகை' மேளம்

kaleelrahman

சபரிமலை ஐயப்பன் துயில் உணர்த்தும் கேரளாவின் பாரம்பரிய 'தாயம்பகை' மேள இசையோடு அதிகாலை பூஜைகள் தொடங்குகின்றன.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையில் தினசரி தரிசனம் முடிந்து இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் அதிகாலை 3 மணிக்கு பள்ளி உணர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது துயில் கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காக துயில் உணரும் நேரமாக இது கருதப்படுகிறது. தொடர்ந்து 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான தரிசனங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

சாமி ஐயப்பன் பள்ளி உணரும் அந்த நேரத்தில் கேரளாவின் பாரம்பரிய மிக்க செண்டை மேளத்தின் ஒருவகையான 'தாயம்பகை' என்ற மெல்லிய மேளம் இசைக்கப்படுகிறது. இந்த இசை மூலம் சாமி ஐயப்பன் துயில் உணர்வதாக ஐதீகம் உள்ளது.

அந்த வகையில் கண்ணூர் மாவட்டம் சேலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி குழுவினரின் 'தாயம்பகை' மேள இசை நிகழ்ச்சி. சபரிமலை சன்னிதானத்தில் நடந்தது. 8 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று மேளம் இசைத்தனர்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு ஆகிய நான்கு வாத்தியங்கள் உள்ளன. பஞ்சாரி மேளம், பாண்டி மேளம், சம்ப மேளம், செம்பட மேளம், அடந்த மேளம், அஞ்சடத மேளம், த்ருவ மேளம் என்ற தாள வகைகள் உள்ளன.

செண்டையும், இலைத்தாளமும் இன்றி இசைக்கப்படும் மேளம் தான், 'தாயம்பகை' எனப்படுகிறது. தாயம்பகை' மேளத்தில் பயன்படுத்தப்படும் செண்டையின் வட்டம் மெல்லியதாக உள்ளது. அதனால் தான் மெல்லிசை எழும்புவதாக மேள வித்துவான்கள் தெரிவிக்கின்றனர்.