இந்தியா

பாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி

பாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி

webteam

சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உடனடியாக அந்தத் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. இதைத்தொடர்ந்து ரெஹானா பாத்திமா முதல் ஸ்வீட்டி மேரி வரை ஐயப்பன் கோவில் சன்னிதானம் செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டனர். 

பின்னர், ஜனவரி 2 ஆம் தேதி காலை கேரள அரசு ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் பிந்து மற்றும் கனக துர்கா எனும் 40 வயதுடைய பெண்கள் அதிகாலை சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தது. இவ்விவகாரம் நாடு முழுவதும் வேகமாக பரவியதால் கேரளாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

இதனிடையே சபரிமலை விவகாரம் குறித்து கடந்த அக்டோபரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்து அமைப்பினருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, ஆண்களும் பெண்களும் சமம் எனவும் பெண்கள் நினைத்தால் அவர்கள் விருப்பப்பட்ட எந்த இடங்களுக்கும் செல்லலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். துபாயில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதேசமயம் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.