லாரிக்குள் ஒளிந்து சிம்லாவிற்குள் நுழைய முயன்ற ரஷ்யப் பெண் மற்றும் இந்திய இளைஞரை காவல்துறையினர் பிடித்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு மக்கள் பயணிக்க முடியாத சூழல் இருக்கிறது. அதேசமயம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இருப்பினும் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் அரசிடம் முறையாக அனுமதிச் சீட்டு பெறவேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில் முறையான அனுமதியின்றி உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவிலிருந்து 30 வயது கடந்த ரஷ்யப் பெண் ஒருவரும், 20 வயது கடந்த அவரது காதலனான இந்திய இளைஞர் ஒருவரும் லாரி மூலம் சிம்லா நோக்கிப் பயணித்துள்ளனர். சில லாரிகளில் மாறி வந்த அவர்கள், கடைசியாக ஷோகி என்ற பகுதியிலிருந்து சிம்லாவிற்குள் நுழைய முயன்றபோது, போலீஸாரின் பரிசோதனையில் சிக்கிக்கொண்டனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அந்த இளைஞரின் ஊரான நிர்மந்த் சென்று, பின்னர் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், அவர்களிடம் முறையான அனுமதிச் சீட்டு இல்லாததால், ஊரடங்கு இந்தியத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது. அத்துடன் லாரி ஓட்டுநர் மற்றும் கிளினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஓட்டுநர், கிளினர் மற்றும் இந்திய இளைஞர் மூவரும் ஷோகி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ரஷ்யப் பெண் தாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.