இந்தியா

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு

rajakannan

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படியே இந்தியா செயல்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. கடந்த திங்கள்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மறுநாள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துவிட்டார். அதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும்  370 ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 

இந்தியாவின் இந்த அதிரடியான நடவடிக்கை பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. லடாக் விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சீனாவும் இந்தியாவுக்கு வலியுறுத்தியது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், “இந்தியா தனது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை கையாண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைய இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவும், பாகிஸ்தான் ஒற்றுமையுடன் இருந்தால் ரஷ்யா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்” என்று கூறியுள்ளது.