கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, ஓட்டுக்கு பண விநியோகம் செய்வது குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, உஷார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 10 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 702 பறக்கும் படைகள் மற்றும் 702 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நாடுமுழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரூபா ஐபிஎஸ், ஓட்டுக்கு பண விநியோகம் செய்வது குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வாக்காளர்களைக் கவரப் பயன்படுத்தும் நூதன வழிகள் இவை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் சப்பாத்திக்குள் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் வைத்து விநியோகம் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியான ரூபா ஐபிஎஸ், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.