பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய உணவு தானிய பைகளை வாங்க இந்திய உணவு கழகம் ஐந்து மாநிலங்களில் 15 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது.
சமூக ஆர்வலரான அஜய் போஸ் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்திய உணவுக் கழகத்தின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் ராஜஸ்தான், சிக்கிம், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய உணவு பைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் 1 கோடியே 7 லட்சம் பைகளுக்கு 13.29 கோடி ரூபாயும், திரிபுராவில் 5 லட்சத்து 98 ஆயிரம் பைகளுக்கு 85.51 லட்சம் ரூபாயும் செலவிடப்படுவதாக கூறியுள்ளார். மேகாலயாவில் 4 லட்சத்து 22 ஆயிரம் பைகளுக்கு 52.75 லட்சம் ரூபாயும், மிசோரத்தில் 1 லட்சத்து 75 ஆயிரம் பைகளை வாங்க 25 லட்சம் ரூபாயும் செலவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சிக்கிமில் 98 ஆயிரம் பைகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு பைக்கு 14 ரூபாய் 65 காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஐந்து மாநிலங்களிலும் ஒரு பையிற்கான விலையில் மாறுபாடு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட தகவல் இது என தெரிவித்துள்ளார். இந்திய உணவுக் கழகத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசியல் ஆதாயத்திற்காக பொதுநிதியை ஆளுங்கட்சி தவறகாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.