இந்தியா

‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்

webteam

தலைமை நீதிபதியின் அலுவலகம் ஆர்டிஐ சட்ட வரம்பிற்குள் வரும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி விக்ரம்ஜீத் சென் மற்றும் நீதிபதி முரளிதர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆர்டிஐ சட்டத்திற்குள் வரும் எனத் தீர்ப்பு அளித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை கடந்த 2016ஆம் ஆண்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சிவ் கண்ணா கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதி சஞ்சிவ் கண்ணா , “வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை எப்போதும் தகர்க்காது. வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அதிகரிக்கும். நீதிமன்றம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அத்துடன் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டமான (ஆர்டிஐ) கீழ் வரும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, மற்றொரு நீதிபதியான நீதிபதி என்.வி.ரமணா, “தனிமனித சுதந்திரமும் தகவல் அறியும் உரிமையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. இவற்றில் ஒன்று மற்றொன்றைவிட பெரிதல்ல. எனினும் நீதிமன்றங்கள் கண்காணிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும். நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ள ஆர்டிஐ சட்டம் உதவியாக இருக்கும்” எனக் கூறி அவரும் நீதிபதி கண்ணாவின் தீர்ப்பிற்கு ஆதரவு அளித்துள்ளார். 

மற்றொரு நீதிபதியான சந்திரசூட், “நீதிமன்ற சுதந்திரம் எனக் கூறி சட்டத்திலிருந்து விடுபட முடியாது. அத்துடன் நீதிபதிகளின் சொத்துகள் சார்ந்த விவரங்களை தனிமனித உரிமை என்று கூறி ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது. அதேபோல நீதிமன்றங்கள் எப்போதும் எந்த கட்டுபாட்டிற்குள் வராமல் தனியாக செயல்பட முடியாது. ஏனென்றால் நீதிபதிகள் அனைவரும் அரசியல் சாசன பதவியை வகித்து மக்களுக்கு தங்களின் கடமைகளை ஆற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.