ஆர்டிஐ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.
பொது மக்கள் தகவல் அறிய கொண்டுவரப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ). இந்தச் சட்ட மசோதா கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த மசோதா தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா ஆர்டிஐ சட்டத்தின் முக்கிய நோக்கத்தை அளிக்கும் விதத்தில் உள்ளது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டின. திருத்த மசோதா ஆர்.டி.ஐ.யின் வலிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். இந்த மசோதா ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரும் அடி” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்டிஐ சட்டத்தின்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. மேலும் அவரின் ஊதியம் தேர்தல் ஆணையருக்கு நிகராக உள்ளது. இனிமேல் தகவல் ஆணையரின் ஊதியம், பதவி காலம் மற்றும் நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகுத்துள்ளது. இந்த மசோதா ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 13,16,27 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.