ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் twitter
இந்தியா

“அமைதிக்காக காத்திருக்கும் மணிப்பூரில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்”-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தலில் கிடைத்த வெற்றியை அனைவரும் விட்டொழிக்கவும். தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மைய பெறமுடியாத சூழலில், கூட்டணி கட்சிகளின் உதவியோடு மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இந்தவகையில், முதல் புதிய மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.

மோகன் பகவத்

இதே நாளில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கான காரியகர்த்தா விகாஸ் வர்க் - காலமுறை பயிற்சித் திட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “நாடாளுமன்றம் இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது. இதனால் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு அம்சங்களையும் முன்வைக்க முடியும். உண்மையான சேவகருக்கு அகங்காரம் இருக்காது. அத்தகைய நபர் மட்டுமே சேவகர் என்று அழைக்கப்படுவார்.

கடந்த ஓராண்டாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலம் அமைதியாகவே இருந்தது. ஆனால், திடீரென மீண்டும் துப்பாக்கி கலாசாரம் அங்கே தலைதூக்கியுள்ளது. ஆகவே மணிப்பூர் கலவரத்தை நிறுத்த, முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்வு காண வேண்டும். அங்கு வன்முறை நிறுத்தப்பட வேண்டும்.

பொருளாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, தொழில்நுட்பம் என பல துறைகளில் நாம் முன்னேறி விட்டதால் நாம் எல்லா சவால்களையும் தாண்டிவிட்டோம் என்று அர்த்தமல்ல. எதிர்க்கட்சி ஒரு எதிரி அல்ல. தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு நிகழ்வு. இதை ஒரு போட்டியாகதான் பார்க்கவேண்டுமே தவிர ஒரு போராக பார்க்க கூடாது.

ஆனால், இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட விஷயங்கள், ஒருவரை ஒருவர் சாடிக்கொண்ட விதம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பொய்யான செய்திகளை பரப்புவது ஆகியவை ஆரோக்கியமானதல்ல. ஆகவே, தேர்தலில் கிடைத்த வெற்றியை விட்டொழிந்து, தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் அனைவரும் கவனம் செலுத்தவும். அதுவே அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.