ஆர்.எஸ்.எஸ். எக்ஸ் தளம்
இந்தியா

மக்கள் நலனா? அரசியலா? | சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ்... கேள்வி எழுப்பிய காங்கிரஸ்!

Prakash J

மக்களவைத் தேர்தலுக்குப் பின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. தவிர, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவின் சில கூட்டணிக் கட்சிகளான சிராக் பஸ்வானின் எல்ஜேபி, பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடி(யு) போன்ற கட்சிகளும் சாதிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளன. இந்த நிலையில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரி கணக்கெடுப்பை மறைமுகமாக ஆதரித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்னை. அது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாக கவனமாக கையாள வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்திற்கு தரவுகள் தேவைப்படுகின்றன. கடந்தகாலங்களில் இதேபோன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சாதிக் கணக்கெடுப்பு சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதை அரசியல் கருவியாகவோ, தேர்தல் பிரசாரத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: விமான நிலையத்தில் சூட்கேஸைக் கடித்து சாப்பிட்ட இளம்பெண்.. அதிர்ந்த பயணிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளரான ஸ்ரீதர் காட்ஜ், ”சாதிவாரி கணக்கெடுப்பு வீணற்ற நடவடிக்கை. அது ஒருசில நபர்களுக்கு மட்டுமே உதவும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரியான மக்கள்தொகையை கணக்கிடும். ஆனால், அது சமூக அல்லது தேச நலனுக்காக இருக்கப்போவதில்லை" எனக் கூறியிருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில்தான், சுனில் அம்பேகரின் கருத்து, அதற்கான பதிலாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "சாதிக் கணக்கெடுப்பை அங்கீகரிக்கவோ, ஏற்கவோ ஆர்எஸ்எஸ்ஸுக்கு அதிகாரம் உள்ளதா? சாதிக் கணக்கெடுப்பை தேர்தல் பிரசாரத்திற்கு தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் கூறும்போது என்ன அர்த்தம்? ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு நீதிபதியாக அல்லது நடுவராக நிலைநிறுத்திக்கொள்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!