இந்தியா

உண்மையில் யார் குற்றவாளி என கண்களை திறந்துப் பாருங்கள் - அல்போன்ஸ் புத்திரனின் பதிவு ஏன்?

உண்மையில் யார் குற்றவாளி என கண்களை திறந்துப் பாருங்கள் - அல்போன்ஸ் புத்திரனின் பதிவு ஏன்?

சங்கீதா

கேரளாவில் ஓட்டல் ஒன்றில் சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்ட இளம் செவிலியர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஷாவர்மா சாப்பிட்டு தனக்கு நிகழ்ந்த சோகத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 33 வயதான ராஷ்மி என்ற இளம் பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி கோட்டயத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மந்தி பிரியாணி மற்றும் அல்பாமா சிக்கன் வாங்கி செவிலியர் ராஷ்மி சாப்பிட்டுள்ளார். இதன்பிறகு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ராஷ்மி சாப்பிட்ட அன்றைய தினத்தில், அதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கும் மேலானோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த உணவகத்தின் மீது உறவினர்கள் கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தின் லைசென்ஸை ரத்து செய்து சீல் வைத்தனர்.

மயோனைஸ் தான் விஷமாக மாறி இந்த உடல்நலக்குறைவுக்கு காரணமாக கருதப்பட்டாலும், ஆய்வுக்குப் பின்னரே உறுதியாக சொல்லமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் சிக்கன் ஷாவர்மா சாப்பிட்ட கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தேவநந்தா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது செவிலியிர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், புட் பாய்சனால் தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவத்தை ‘நேரம்’, ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “விமர்சனம் எழுதுபவர்கள், ரோஸ்டர்ஸ் மற்றும் ட்ரோலர்ஸ் (Roasters and Trollers), இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ பதிவு செய்யுங்கள். 15 ஆண்டுகளுக்கு முன் ஆலுவாவில் உள்ள உணவகம் ஒன்றில் நான் ஒரு ஷாவர்மா சாப்பிட்டேன். எனது நண்பர் ஷராஃப் உதீன் அளித்த ட்ரீட் அது.

மயோனைஸ் உடன் ஷாவர்மா சாப்பிட்டேன். ஆனால் அடுத்த நாளே (pancreatitis pain) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சுமார் ரூ.70,000 செலவு செய்து, எனது பெற்றோர் என்னைக் காப்பாற்றினார்கள். உடல் நலக்குறைவால் எம்சியூவில் இருந்தேன். காரணம் ஏதுமின்றி நண்பர் மீது கோவப்பட்டேன். ஆனால், உண்மையில் கெட்டுப்போன அசுத்தமான உணவுதான் எனது நிலைமைக்குக் காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார், உங்கள் கண்களைத் திறந்து உண்மையைப் பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது” இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை பதிவு செய்த இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.