இந்தியா

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு செய்த மத்திய அரசு

webteam

கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூ.643.84 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது

மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 3 வருடங்களில் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு செல்ல ரூ.643.84 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இந்தத் தொகையானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகையை விட 29 மடங்கு அதிகம் ஆகும்.

அதேவேளையில் மலையாளம் மற்றும் ஒடியாவின் மேம்பாட்டிற்காக எந்தவொரு தனி நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. மேலும் இந்த தொன்மையான இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக எந்தவொரு சிறப்பு மையத்தையும் அரசு இதுவரை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்களவையில் சிவசேனா எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு இந்த தரவுகளை தெரிவித்துள்ளது.

மேலும், சமஸ்கிருதத்திற்காக 2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (சி.ஐ.சி.டி) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மையத்தின் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழின் மேம்பாட்டிற்கு 2017-18ம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19ம் ஆண்டில் ரூ.4.65 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் செம்மொழி மொழிகளுக்கான மையம் தெலுங்கிலும், கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தில் செம்மொழி மொழிகளுக்கான மையம் கன்னடத்திலும் அமைக்க பல்கலைக்கழக மானிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கன்னடம் மற்றும் தெலுங்கிற்கான நிதி ஒதுக்கீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக, 2017-18-ஆம் ஆண்டில் தலா ரூ 1 கோடி, 2018-19ல் ரூ 99 லட்சம், 2019-20ல் ரூ 1.07 கோடி என இருந்துள்ளன. இதற்கிடையே ஒடியா மற்றும் மலையாளத்திற்கான மேம்பாட்டு மையங்களை அமைப்பதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.